August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தேசியப்பட்டியல் நியமனங்களில் சட்டவிரோத ஒப்பந்தங்கள் எதையும் செய்யவில்லை -புதிய ஜனநாயக முன்னணி செயலாளர் !

தேசியப்பட்டியல் நியமனங்களில் சட்டவிரோத அல்லது முரண்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யவில்லை என்றும் தங்களின் உரிமையை மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சியாமளா பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஊடகங்கள் மூலம் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதால், சமூகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தும் வகையிலேயே செயலாளர் சியாமளா பெரேரா விளக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு . பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி (CUP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,பொதுஜன ஐக்கிய முன்னணி (நாற்காலி ) புதிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைக்க இணக்கம் தெரிவித்தன. அதற்கிணங்க எமது கட்சியின் உத்தியோகபூர்வ இலச்சினையான “அன்னத்தை ” காஸ் சிலிண்டராக மாற்றவும், கட்சி யாப்பில் சில திருத்தங்களைச் செய்து அதற்குத் தேவையான சூழலை தயார் செய்யவும் அந்தக் கட்சிகள் எங்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தன. இதன்படி மேற்படி கட்சிகளுக்கும் புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணி

மேற்படி உடன்படிக்கையின் உப ஆவணம் 05 இன் பிரகாரம்,புதிய ஜனநாயக முன்னணியினால் பரிந்துரைக்கப்படுபவருக்கு தேசியப் பட்டியல் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக இரண்டு பதவிகளைப் பெற்றுள்ளது. கட்சிகளுக்கிடையிலான உடன்படிக்கையின் படி, பதவிகளில் ஒன்று எங்கள் கட்சிக்கு வேட்பாளருக்கு வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே, நவம்பர் 17, 2024 அன்றைய தினம் கூடிய கட்சியின் செயற்குழு பரிந்துரைத்த ரவி கருணாநாயக்கவுக்கு வழங்க தீர்மானித்தது.

ஏனைய கட்சிகளுக்கும் எமது கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் எமது கட்சி தேசியப்பட்டியல் பதவிக்கு ஒருவரை முன்னிறுத்துவது எமது உரிமையின் படி செயற்படுவது பிழையாகவோ அல்லது தன்னிச்சையான செயலாகவோ எவரேனும் கண்டால் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி எதனையும் செய்யவில்லை என்றே கூறவேண்டும்.

நவம்பர் 18, 2024 க்குள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதுவரை எனக்கு அறிவிக்கப்படாததால், ரவி கருணாநாயக்கவின் பெயரை கட்சி எடுத்த முடிவுக்கமைய தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தோம்.

அதற்கு முன்னதாக, கட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரியப்படுத்தினோம்.