August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை உடன் நீக்கு” – ஐ.நா அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பினர், பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (10) வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால் நாட்டில் நிலவும் மனித உரிமைகள்சார் கரிசனைகளை வெளிப்படுத்தி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டோர் ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு’, ‘நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்கு’, ‘உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்து’, ‘அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்’, ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதியை நிலைநாட்டு’, ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கு’, ‘கோட்டா – ரணில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கு’, ‘பால்புதுமையின சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்து’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் குறித்துக் கருத்து வெளியிட்ட வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா, நாட்டில் நிலவும் மனித உரிமைகள்சார் கரிசனைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் எதனையும் இன்னமும் முன்னெடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மாறாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரயோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசனம் வெளியிட்டார்.

மேலும், யாராக இருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும், ஆகவே அச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.