August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

ரணில் விக்ரமசிங்கவை யாராலும் பணயக்கைதியாக வைக்க முடியாது.

ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியலுக்கு அனுப்பிவைத்த விவகாரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருக்க முடியாது. அதனாலே அவரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு தேசியப்பட்டியல் ஆசனங்கள்   இரண்டு கிடைக்கப்பெற்றன. அதில் ஒன்றை ரவி கருணாநாயக்க எடுத்துக்கொண்டுள்ளார். அவர் அதனை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில் முன்னணி கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பில் முன்கூட்டியே ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்ததாக ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த விடயம் தெரிந்திருந்தால், அவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஏன் விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். 

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவே ஆரம்பமாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கட்சியில் யாரும் ரணில் விக்ரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருப்பதில்லை. அவ்வாறு அவரை யாராலும் பணயக்கைதியாக வைக்கவும் முடியாது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு யாரை வேண்டுமானாலும் பணயக்கைதியாக வைத்திருக்க முடியும். 

அதேநேரம் புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் அடுத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிப்பது என்ற விடயத்தில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும் தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பெரிதாக எதனையும் செய்ய முடியாது. என்றாலும் விவாதங்களின்போது தரவுகளை முன்வைக்க முடியுமான இளம் ஒருவரை அனுப்ப வேண்டும் என்றே பலரது நிலைப்பாடாக இருந்தது. அந்தவகையில் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கு பெரும்பான்மையானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தங்களின் உறுப்பினர் ஒருவரை தேசியப்பட்டியலுக்கு நியமிக்க வேண்டும் என தெரிவித்து வருகிறது. அதனால் இறுதி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.